• Friday, 05 September 2025
குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா: எச்சரிக்கும் டாக்டர்கள்

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா: எச்சரிக்கும் டாக்டர்கள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழ் நாட்டில் 15 ஆயிரத்து 684 பேரை தொற்றி உள்ளது. 94 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை நகரை பொறுத்த வரையில் நேற்று 4250 பேரை தாக்கி உள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்ட போது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள 2-வது அலையில் குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் உயிரிழக்கிறார்கள்.

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பிறந்து 19 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி உயிரிழந்தது.

இது பற்றி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டைரக்டர் டாக்டர் எழிலரசி கூறும்போது, ‘‘இந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு கொரோனா நோய் தாக்கி இருக்கிறது. கடுமையான அறிகுறிகள் இருந்துள்ளன. ஆனால் தங்களை நோய் தாக்கி இருப்பதை அவர்கள் உணரவில்லை. இதன் மூலம் குழந்தைக்கு நோய் தொற்றி இருக்கிறது.

அந்த குழந்தை வேறு ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் பாதிப்பு அதிகமாக இருந்ததால் இறந்துவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சிறிய குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தது இதுதான் முதல் தடவை.

குழந்தையுடைய நுரையீரல் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற பாதிப்புகளை கடந்த முறைபார்க்க வில்லை’’ என்று கூறினார்.

சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘‘எங்கள் ஆஸ்பத்திரிக்கு 11 வயது சிறுவன் அதிகப்படியான நுரையீரல் தொற்றுடன் சிகிச்சைக்கு வந்தான்.

அவனுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளித்து குணமடைய செய்தோம். ஆனால் 2 வயதுடைய இன்னொரு குழந்தை இதேபோல நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தது. சிறிய அளவில்தான் நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. ஆனாலும் ஆக்சிஜன் கொடுத்தும் குணமடையவில்லை. 2 குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘சில குழந்தைகளுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் வழங்க வேண்டி உள்ளது. குழந்தைகளுக்கு நுரையீரலில் கடந்த தடவை இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதை பார்க்கவில்லை. குறிப்பாக சென்னை நகரில் கடந்த தடவை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. இப்போது எல்லாமே மாறி இருக்கிறது’’ என்று கூறினார்.

சேத்துப்பட்டு மேத்தா ஆஸ்பத்திரி குழந்தைகள் நிபுணர் டாக்டர் கண்ணன் கூறும்போது, ‘‘கடந்த தடவை போல் அல்லாமல் இந்த தடவை அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

கடந்த தாக்குதலின் போது குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் இப்போது கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி, இருமல் போன்றவை உள்ளன’’ என்று கூறினார்.

மற்றொரு நிபுணர் கூறும் போது,‘‘2-வது அலையால் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நோய் இருப்பதால் அது குழந்தைகளை தொற்றிவிடுகிறது. எனவே குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறினார்.

 

Comment / Reply From