• Friday, 05 September 2025
மீண்டும் ஊரடங்கு? நாடு தாங்குமா...

மீண்டும் ஊரடங்கு? நாடு தாங்குமா...

கொரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டாவது அலை இந்தியாவில் அதி வேகமாகப் பரவி வருகிறது. பிப்ரவரி மாத மத்தியில் மிகக் குறைந்த அளவாக ஒரு நாளைக்கு 12,000 நபர்கள் மட்டுமே சராசரியாக இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், ஒன்றரை மாத இடைவெளியில் அந்த எண்ணிக்கை 65,000-ஆக உயர்ந்து இருக்கிறது. சென்ற மாதத்துடன் ஒப்பிட்டால் ஐந்தரை மடங்கு மக்கள் அதிகமாக இந்த நோய்த் தொற்றால் தற்போது தினம்தோறும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு திரும்பவும் கொண்டு வரப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக இயங்குகின்றன

மத்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு கொண்டு வரப்படாது என்று அறிவித்து வந்தாலும், மக்களிடம் அந்த அச்சம் தீர்ந்த பாடில்லை. ஊரடங்கு தொடர்பான பலவிதமான புரளி எங்கும் பரவி வருகிறது. மக்களில் பலரும் கொரோனா நோய்த் தொற்றுடன்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஊரடங்கு கொண்டு வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட ஊரடங்கிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் மீண்டும் முதலில் இருந்து ஊரடங்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. கடந்த ஊரடங்கு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்தது என்பதை முதலில் பார்ப்போம்.

ஊரடங்கு...
ஊரடங்கு...

பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு...

கடந்த ஆண்டில் உலக அளவில் மிக அதிக சதவிகித வளர்ச்சி பெற்ற நபராக கெளதம் அதானியின் சொத்துமதிப்பு 16.2 பில்லியன் டாலர் உயர்ந்து 50 பில்லியன் டாலராக உள்ளது. கெளதம் அதானியின் வளர்ச்சி விகிதம் உலகின் முதல் பணக்காரர்களான எலான் மாஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸைவிட அதிக விகிதாச்சாரத்தில் உயர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுபோல, ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து அதிகரித்ததால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரராக மாறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் சீனாவில் தண்ணீர் பாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் சோங் ஷான்ஷனை (Zhong Shanshun) பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரர் என்கிற பெருமையை அம்பானி மீண்டும் தக்க வைத்துள்ளார்

 ஆனால், இதற்கு நேர்மாறாக உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பியூ ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு நடுத்தர வர்க்கத்தினர் ஏழை வர்க்கத்தினராக மாறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கு குறைவான ஊதியம் ஈட்டும் நபர் ஏழை என்ற வரையறைக்குள் வருகிறார். 700 முதல் 1,500 ரூபாய் வரை ஊதியம் ஈட்டுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்ற வரையறைக்குள் வருவார்கள்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஏழை வர்க்கத்தினர் இந்தியாவில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு ஆறு கோடி என்கிற அளவில் இருந்த இந்திய ஏழை மக்களின் எண்ணிக்கை 13.4 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

700 முதல் 1,500 ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த 3.2 கோடி நடுத்தர மக்கள் நாளொன்றுக்கு 150 ரூபாய்க்குகீழ் ஈட்டும் நிலைக்கு கொரோனா ஊரடங்கு பாதிப்பு களைக் கொண்டு வந்துள்ளது என்பதை அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணமாக வேலை இழப்பு, ஊரடங்குக்குப் பிறகும் நோய் தொற்றுக்கு முன்பான சூழல் திரும்பாமல் இருப்பது போன்றவை இருக்கின்றன

இந்திய பணக்காரர்கள் உலக அளவில் முதலிடம் பிடிக்க பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மீண்டும் ஊரடங்கு ஏற்படுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணம்.

தொழில்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பது...

ஊரடங்கு முதலில் அமல் படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் பல தொழில்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, திரைப்படத் தொழில் சார்ந்த தொழில்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா சார்ந்த துறைகள், ஷாப்பிங் மால்கள், திருமணம் சார்ந்த தொழில்கள், ஹோட்டல் கள், அழகுக் கலை நிலையங்கள் போன்ற பல துறைகள் சார்ந்து வாழ்பவர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வராத சூழ்நிலையே நிலவுகிறது. இந்தத் தொழில் சார்ந்து லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடந்த ஓராண்டில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் கடன்களை வாங்கி இன்னும் சற்றுக் காலத்தில் நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையில் நாள்களைத் தள்ளிக்கொண்டு வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கொண்டுவருவது அவர்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

ஊரடங்கு...


கொரோனா நோய்த் தொற்று காரணமாகத் தகவல் தொழில் நுட்பம் போன்ற பல துறை நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு கூறியுள்ளன. அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் தமது பணியாளர்களை பணிக்கு அழைக்க வில்லை.

பொருளாதார சக்கரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதைச் சார்ந்த தொழில்களுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பழைய மாமல்லபுரம் (ஓ.எம்.ஆர்) சாலை பக்கம் ஒரு ரவுண்டு வந்தால் பார்க்கலாம். அந்தப் பகுதிகளில் தங்கி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிசெய்பவர் களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர் கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பழைய மாமல்லபுரம் சாலை இருக்கிறது. பெரும்பாலான அப்பார்ட்மென்ட் வாசல்களில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற போர்டு தொங்குகிறது. அந்தப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். பல கடைகள் மூடப் படும் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்கள் அனைவரும் அந்தப் பகுதியை விட்டுச் சென்ற மக்கள் திரும்ப வருவார்கள் என்கிற ஆவலுடன் காத்து இருக் கின்றனர். மீண்டும் ஊரடங்குக் கொண்டு வந்தால் இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு அந்தப் பகுதி மீண்டு வராத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிற அச்சம் அங்கு தொழில் செய்யும் அனைவரிடமும் உள்ளது.

அதனால் ஊரடங்கு என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போன்றதாக இருக்கிறது. ஊரடங்கு போடுவது நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் என்றாலும், அதனால் பல அப்பாவி மக்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்துக்குத் தள்ளப்படும் நிலை உருவாவதைத் தவிர்க்க முடியாது.

கொரோனா நோய்த் தொற்று பரவிய கடந்தாண்டில் அந்த நோய் பற்றிய எந்தப் புரிந்துகொள்ளலும் எந்த நாட்டிலும் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன.

மேலும், உலகில் அதிக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. என்றாலும் இது வரை ஆறு கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி நமது நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலை நாடுகள் பல 30 - 50% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி யுள்ளனர். ஆனால், நமது நாட்டில் மிகக் குறைந்த வேகத்தில் அதாவது 4% பேருக்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது,

நாம் அடுத்த நாட்டுக்கு உதவுவது முக்கியம் என்றாலும், நமது நாடு சிக்கலில் உள்ளபோது அரசின் முதல் நடவடிக்கை தமது மக்களை காப்பதாக இருக்க வேண்டும். அரசும் பிற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இந்த மாதம் குறைத்துள்ளது. மிக விரைவாக நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த் தொற்றை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

நமது நாட்டில் எடுக்கப்பட்ட செரோ சர்வேயின்படி, கணிசமான மக்களுக்கு இந்த நோய்த் தொற்று மீண்டும் வந்துவிட்டது என்பதை நாம் அறிய முடிகிறது. அதனால் விரைவாகத் தடுப்பூசி செலுத்துவது இந்த நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும். கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற மீண்டும் ஊரடங்கு போடுவதற்குப் பதிலாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல...!

‘‘கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கொண்டுவருவது மட்டுமே தீர்வல்ல’’ என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும், டைசென்னை (TiEChennai) அமைப்பின் தலைவரும், சி.ஐ.ஐ அமைப்பின் தென் இந்தியப் பிரிவின் தலைவருமான சி.கே.ரங்கநாதன். இது குறித்து அவர் சொன்னதாவது...

‘‘கொரோனா இரண்டாம் அலை தொடர்பாக மக்களிடம் அச்சம் எழுந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்கு ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது. முன்பைவிட இந்த நோய் பற்றிய அறிவு நம் மருத்துவர்களுக்கு நிறைய இருக்கிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் நம் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு மிகச் சிறந்த அனுபவம் இருக்கிறது. கடந்த ஆண்டில் நாம் எடுத்த சரியான நடவடிக்கைகளை மீண்டும் எடுத்தாலே போதும், இந்த நோய் மீண்டும் கட்டுக்குள் வந்துவிடும். இந்த நோயில் சிக்காமல் இருக்க மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கைக் கொண்டுவந்தால் பிரச்னை தீர்ந்துவிடாது. பிரச்னை அதிகமாகவே செய்யும். தொழில் வளர்ச்சி பாதிப்படையும். இதனால் தொழில் நிறுவனங்களின் வருமானம் குறைந்து, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருமானம் குறையும். வேலை இழப்பு ஏற்பட்டு, மக்கள் சம்பாதிப்பதும் குறையும். ஒட்டுமொத்தத்தில், நம் நாடே மீண்டும் பெரிய பொருளாதாரச் சரிவை, சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, தற்போதைய நிலையில் ஊரடங்கைக் கொண்டு வர வேண்டியதில்லை என்பதே என் கருத்து!’’

 

Comment / Reply From