• Friday, 05 September 2025
விலைவாசியை ஏற்றும்  கார்ப்பரேட் கொள்ளை

விலைவாசியை ஏற்றும் கார்ப்பரேட் கொள்ளை

ஒருபுறம் கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தை சோதித்துக் கொண்டிருக்க, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை 40 விழுக்காடு அதிகரித்திருப்பதும் மக்களை மீண்டெழ விடாமல் செய்துகொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்ட இந்த விபரத்தின்படி, 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு ஏழை நாடுகளை மிக அதிகமா பாதிக்கும் என்றும், பணக்கார நாடுகள் அதிகளவு பொருட்களைக் கொள்முதல் செய்துவைத்துக்கொள்ளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் இந்த கவிலையேற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதே போல தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து போன்ற காரணங்களினால் வரும் மாதங்களில் இன்னும் விலை உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.

 உணவுப் பொருட்கள் மீது தொடர்ச்சியான விலை உயர்வு தொடர்பாக உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்துவிடம் பேசினோம், ``கடந்த சில ஆண்டுகளாக நிகழும் இந்த விலை உயர்வு மூலம் லாபம் சம்பாதிப்பது விவசாயிகள் இல்லை இடைத் தரகர்கள் மட்டுமே. விளைவிக்கும் விவசாயிக்கும், பொருள் வாங்கும் நுகர்வோருக்கும் நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு விவசாயிகளிடமிருந்து கிலோ 10 ரூபாய்க்கு பொருள் வாங்கும் ஒரு இடைத்தரகர் அன்றைய சந்தை மதிப்பைப் பொறுத்து கிலோவிற்கு 30-50 ரூபாய்வரை கொள்ளை லாபம் வைத்து அதைச் சந்தைகளில் விற்பனை செய்கிறார். விற்பனை செய்யும் நபரும் லாபம் வைத்து விற்கக் கடைசியில் நுகர்வோருக்கு 70-80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.
மேலும், ``இது ஒருபுறமிருக்க கார்ப்ரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு நேரடி கொள்முதல் செய்து அதை அதிகவிலைக்கு விற்பனை செய்துவருகிறது. கொரோனா பேரிடர் என்பதினால் விலை உயர்வு என்பது எல்லாம் கிடையாது. கொரோனா முதல் எல்லா பேரிடர் காலத்திலும் விவசாயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. பால் நிறுவனங்கள் எப்படி அனைத்து கிராமங்களிலும் சங்கம் அமைத்து நேரடி கொள்முதல் செய்து நியாயமான விலையைக் கொடுக்கிறதோ, அதோ போல அனைத்து கிராமங்களிலும் விளைபொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்து நுகர்வோரிடம் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த இடைத்தரகர்களின் இடையூறு எதுவும் இல்லாது விலைவாசி உயர்வு என்பது ஏற்படாது இருக்கும்." என்று கூறினார்.
 
இந்த விலை உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``உலகளவில் உணவுப் பொருட்கள் மீதான விலை உயர்வுக்குக் காரணம் கார்ப்ரேட் நிறுவனங்களின் தலையீடுகள் தான். கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்களின் விவசாயத்துறையில் வந்துகொண்டிருக்கின்றனர். காரணம், பொதுமக்கள் அனைவருமே ஒரு கட்டத்தில் மற்ற அனைத்து பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிடுவார்கள்.
 
ஆனால், உணவுப் பொருள் என்பது ஒவ்வொருவருக்குமே அன்றாட தேவை. தேவை உள்ளவரை விற்பனை நடந்துகொண்டு தான் இருக்கும். கார்ப்ரேட் நிறுவனங்கள் அனைத்துமே லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுபவை தான் குறைந்த விலையில் ஒரு இடத்தில் பொருளை வாங்கி அதைத் தேவை உள்ள இடத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். விலை உயர்வுக்குக் காரணம் இது தான், இதில் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும் அல்ல பொருளை வாங்கும் நுகர்வோரும் தான். இடையில் இவர்கள் தான் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளை உற்பத்தி செய்த விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்" என்றார்.
 

Comment / Reply From